திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.7 திருஏகம்பம் (காஞ்சிபுரம்)
பண் - காந்தாரம்
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
1
தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை பெருமானை
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
2
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.
3
அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப்
பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.
4
ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
5
தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
6
நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
7
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதின்மூன்றும்
எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.
8
ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.
9
அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.44 திருஏகம்பம் (காஞ்சிபுரம்)
பண் - காந்தாரம்
நம்பனை நகர மூன்றும்
    எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை
    அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட்
    செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச்
    சிந்தியா எழுகின் றேனே.
1
ஒருமுழம் உள்ள குட்டம்
    ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம்
    அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக்
    கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக்
    கச்சியே கம்ப வீரே.
2
மலையினார் மகளோர் பாக
    மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந்
    தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி
    ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார்
    தலைவர்க்குந் தலைவர் தாமே.
3
பூத்தபொற் கொன்றை மாலை
    புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத்
    திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற
    ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்
    மால்கொடு மயங்கி னேனே.
4
மையினார் மலர்நெ டுங்கண்
    மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக்
    கடைதொறும் பலிகொள்
எய்வதோர் ஏனம் ஓட்டி வார்தாம்
    ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக்
    கடுவினை களைய லாமே.
5
தருவினை மருவுங் கங்கை
    தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும்
    அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ்
    செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே
    உள்ளத்தால் உகக்கின் றேனே.
6
கொண்டதோர் கோல மாகிக்
    கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில்
    உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த
    நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான்
    கருதியே திரிகின் றேனே.
7
படமுடை அரவி னோடு
    பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிசை மூடிக்
    கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள்
    ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண
    ஞாலந்தான் உய்ந்த வாறே.
8
பொன்றிகழ் கொன்றை மாலை
    பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
    மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக்
    குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார்
    இனியர்ஏ கம்ப னாரே.
9
துருத்தியார் பழனத் துள்ளார்
    தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார்
    அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி
    ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்
    வல்வினை மாயு மன்றே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.100 திருஏகம்பம் (காஞ்சிபுரம்) - திருவிருத்தம்
ஓதுவித் தாய்முன் அறவுரை
    காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்பிணி
    தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக்
    கிற்புளி யம்வளாரால்
மோதுவிப் பாய்உகப் பாய்முனி
    வாய்கச்சி யேகம்பனே.
1
எத்தைக்கொண் டெத்தகை ஏழை
    அமணொ டிசைவித்தெனைக்
கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு
    வித்தென்னைக் கோகுசெய்தாய்
முத்தின் திரளும் பளிங்கினிற்
    சோதியும் மொய்பவளத்
தொத்தினை யேய்க்கும் படியாய்
    பொழிற்கச்சி யேகம்பனே.
2
மெய்யம்பு கோத்த விசயனோ
    டன்றொரு வேடுவனாய்ப்
பொய்யம்பெய் தாவ மருளிச்செய்
    தாய்புர மூன்றெரியக்
கையம்பெய் தாய்நுன் கழலடி
    போற்றாக் கயவர்நெஞ்சிற்
குய்யம்பெய் தாய்கொடி மாமதில்
    சூழ்கச்சி யேகம்பனே.
3
குறிக்கொண் டிருந்துசெந் தாமரை
    ஆயிரம் வைகல்வைகல்
நெறிப்பட இண்டை புனைகின்ற
    மாலை நிறையழிப்பான்
கறைக்கண்ட நீயொரு பூக்குறை
    வித்துக்கண் சூல்விப்பதே
பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங்
    காஞ்சியெம் பிஞ்ஞகனே.
4
உரைக்குங் கழிந்திங் குணர்வரி
    யான்உள்கு வார்வினையைக்
கரைக்கு மெனக்கை தொழுவதல்
    லாற்கதி ரோர்களெல்லாம்
விரைக்கொண் மலரவன் மால்எண்
    வசுக்கள்ஏ காதசர்கள்
இரைக்கும் அமிர்தர்க் கறியவொண்
    னானெங்கள் ஏகம்பனே.
5
கருவுற்ற நாள்முத லாகவுன்
    பாதமே காண்பதற்கு
உருகிற்றென் னுள்ளமும் நானுங்
    கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால
    வாயா திருவாரூரா
ஒருபற் றிலாமையுங் கண்டிரங்
    காய்கச்சி யேகம்பனே.
6
அரியேன் இந்திரன் சந்திரா
    தித்தர் அமரரெல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை
    யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக
    முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை ஏகம்ப
    என்னோ திருக்குறிப்பே.
7
பாம்பரைச் சேர்த்திப் படருஞ்
    சடைமுடிப் பால்வண்ணனே
கூம்பலைச் செய்த கரதலத்
    தன்பர்கள் கூடிப்பன்னாள்
சாம்பலைப் பூசித் தரையிற்
    புரண்டுநின் றாள்சரணென்
றேம்பலிப் பார்கட் கிரங்குகண்
    டாய்கச்சி யேகம்பனே.
8
ஏன்றுகொண் டாயென்னை எம்பெரு
    மானினி யல்லமென்னிற்
சான்றுகண் டாய்இவ் வுலகமெல்
    லாந்தனி யேனென்றென்னை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத்
    தாய்பின்னை ஒற்றியெல்லாஞ்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப
    மேய சுடர்வண்ணனே.
9
உந்திநின் றாருன்றன் ஓலக்கச்
    சூளைகள் வாய்தல்பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ
    ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு
    மாலும் மதிற்கச்சியாய்
இந்தநின் றோமினி எங்ஙன
    மோவந் திறைஞ்சுவதே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com